செய்தி வெளியீடு

வடசென்னையின் காற்று மாசு தமிழ்நாட்டின் கார்பன் சமநிலை கனவுகளை பற்றி கவலை எழுப்புகிறது; மக்கள் அமைப்புக்கள் உடனடி நடவடிக்கைக்கு அழைப்பு

சென்னை, 23 டிசம்பர் 2022: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தன் இலக்குகளை தமிழ்நாடு உயர்த்திக்கொண்டு கார்பன் சமநிலையை (Carbon Neutral) எட்டுவதற்காக தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தைத் துவக்கியுள்ளது.  ஆனால், தமிழகத்தின் காலநிலை கூற்றுக்கள் எண்ணூர்-மணலி பகுதியில் உள்ள மாநிலத்தின் மிகப்பெரிய தொழிற்சாலை பகுதியின் காற்று மாசுபாட்டின் நீண்டகால பிரச்சனைகளால் பொய்யாகின்றன. வடசென்னையின் 13 இடங்களிலிருந்து 24-மணி நேரத்துக்கான காற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில், தேசிய சுற்றுப்புற காற்று தர நிர்ணயமான (National Ambient Air Quality Standard) 60 µg/m3 விட, நுண்துகள் தூசு 2.5ன் (PM 2.5) அளவு காற்றில்  1.2 முதல் 4.3 மடங்கு அதிகமானதாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.  மாநகரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் சுற்றுச்சூழல் நீதி பிரச்சார இயக்கமான ‘Let Chennai Breathe’, விளிம்புநிலை சமூகங்கள் வாழும் பகுதிகள் நிறைந்த வட சென்னையில் மிக அதிக அளவில் குவிந்திருக்கும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளின் காரணமாக இப்பகுதியில் சுற்றுச்சூழல் சாதிய வாதம் இருக்கிறது என்று அது குறிப்பிடுகிறது. 

கொடுங்கையூரின் குப்பைக் கிடங்கு இருக்கின்ற இடத்தின் அருகே உள்ள குடியிருப்புக் கட்டிடத்திலும்,  பெட்ரோல் தொழிற்சாலைகள் நிறைந்த மணலியிலும் எடுக்கப்பட்ட நுண் துகள் தூசின் அளவு 259.4 µg/m3 முதல் 199.2 µg/m3 வரை இருந்தது. இது நுண்துகள் மிக அதிக அளவாகும். இது போன்ற அளவுகள் “மிகவும் ஆரோக்கியமற்றது” என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் முகமை (US Environmental Protection Agency) குறிப்பிடுகிறது. “இப்பகுதியில் வாழ நேரிடுகின்ற இதய நோய் அல்லது சுவாசப் பிரச்சனை உள்ளவர்களும், முதியோர்களும், சிறார்களும் எவ்விதமான உடல் ரீதியான வேலைகளையும் மேற்கொள்ளக் கூடாது” என்று முகமை அறிவுறுத்துகிறது. 

திருவொற்றியூர், சின்ன மாத்தூர், காசிமேடு, குருவிமேடு, மீஞ்சூர், சேப்பாக்கம், பாரி முனை, வியாசர்பாடி, அத்திப்பட்டு, பர்மா நகர் காட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில்  நுண்துகள் தூசு 2.5ன் அளவு 69.6 µg/m3 முதல் 149.2 µg/m3 வரை இருந்தது. இந்த அளவு “ஆரோக்கியமற்றது” என்பதால், இப்பகுதியில் வாழ நேரிடுகின்ற இதய நோய் அல்லது சுவாசப் பிரச்சனை உள்ளவர்களும், முதியோர்களும், சிறார்களும் அனைத்து விதமான உடல் ரீதியான செயல்பாடுகளையும் மேற்கொள்ளக் கூடாது என்ற அறிவுறுத்தலைப் பின்பற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஆய்வில் கண்டறியப்பட்ட PM2.5 மற்றும் கன உலோகங்கள் பற்றிய விவரங்கள்

இந்த ஆய்வு, சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இருந்த உலோகங்களின் அளவையும் கணக்கிட்டது. கலிபோர்னியாவின் சுற்றுச்சூழல் சுகாதார தீங்கு மதிப்பீட்டின்படி (California Office of Environmental Health Hazard Assessment-OEHHA) சுற்றுச்சூழலில் அனுமதிக்கத்தக்க நுண்துகள் சராசரி அளவான 3 µg/m3 என்பதைவிட சிலிகாவின் அளவு அதிகமாக இருப்பதை ஆய்வுகள் காட்டின. மணலியில் மற்றவற்றை விட  மிக அளவுக்கு  சிலிகா இருந்தது. நிலக்கரி சாம்பல், காற்றில் இருக்கும் சாலை மற்றும் கட்டுமான புழுதிகள், கட்டுமானத்திற்கான மண் ஆகியவற்றில் மிக அதிக அளவுக்கு படிம சிலிகா இருக்கும். இவை மாசின் காரணிகளாக இருக்கக் கூடும். எடுக்கப்பட்ட 13  மாதிரிகளில் 12 மாதிரிகள் மிக உயர்ந்த அளவுக்கு நிக்கலையும் மக்னீசியத்தையும் கொண்டதாக இருந்தன.  

“வட சென்னை சுற்றுச்சூழல் ரீதியாக பாரபட்சம் காட்டப்படும் பகுதியாகும். இப்பகுதியின் மிகவும் தீங்கு விளைவிக்கின்ற  34 மிகப்பெரும் அபாயகர ஆலைகள், 3300 மெகாவாட் திறன் உள்ள நிலக்கரி அனல் மின்நிலையங்கள், நிலக்கரி சாம்பல் குவிப்புகள், நிலக்கரி சேமிப்புக் கிடங்குகள், மிக அதிக அளவுக்கான போக்குவரத்துக்குக் காரணமான மூன்று துறைமுகங்களின் காரணமாக ஏற்படும் மாசுபாட்டின் விளைவாக ஏற்படும் மிகக் கடுமையான விளைவுகள் மாநகரத்தின் சுத்தமான காற்று திட்டதில் (Clean Air Plan) கூட கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது”, என்று தி அதர் மீடியாவைச் சேர்ந்தவரும், Let Chennai Breathe என்ற பிரச்சார இயக்கத்தைச் சேர்ந்தவரும் “சுவாசிக்க முடியாத காற்று” என்ற ஆய்வறிக்கையை எழுதியவருமான மருத்துவர் விஸ்வஜா சம்பத் குறிப்பிடுகிறார்.   

வடசென்னையில் வாழும் மக்கள், ஏற்கனவே, மாசுபாட்டோடு தொடர்புள்ள நோய்களால் மிக அதிக அளவுக்கு பாதிப்பு என்ற அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றனர். வட சென்னையில் வாழும் மக்கள் மிக அதிக அளவுக்கு புற்றுநோய் மற்றும் புற்று அல்லாத நோய் அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும், இந்த அபாயம் பெரியோர்களை விட சிறார்களுக்கு மிக அதிகமானதாக இருக்கிறது என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கூட்டு நிபுணர் குழு அளித்துள்ள ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. 

“இப்பகுதிகளில் வாழும் மக்கள், நுண் துகள் தூசு 2.5 மற்றும் கன உலோகங்களின் தாக்கத்திற்கு,  தொடர்ந்து, மிக அதிக அளவுக்கு ஆளாவதால், மிகவும் கடுமையான பொது சுகாதார அபாயத்திற்கு ஆளாகியுள்ளனர். நுரையீரலின் பாதுகாப்பு அமைப்புகளையும் தாண்டி நுண் துகள் தூசு 2.5  நுழைந்துவிடும். ரத்த ஓட்டத்துக்குள் நுழைந்து மிக அதிக அளவு அதிகரிக்கும் இதய நோயையும் சுவாசப் பிரச்சனைகளையும், அகால மரணங்களையும் இன்ன பிறவற்றையும் கொண்டுவரும்.” என்று மருத்துவர் ஹிசாமுதின் பாப்பா, ஹூமா ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர்-தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (Founder Chairman & Managing Director of Huma Specialists  Hospital & Research Centre),  மற்றும் ரோட்டரி இந்தியா காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (தென்னிந்தியா) இணைத் தலைவர் (Co-Chairman of Operations (South India) of Rotary India TB Control Programme) கூறினார்.

முழு அறிக்கையைப் படிக்க: https://hei-india.in/unfit-to-breathe-2022/ 

மேலும் விவரங்களுக்கு- விஷ்வஜா S – +91 9629505983 | துர்கா M – +91 9384687523

ஒருங்கிணைப்பு- Let Chennai Breathe campaign 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *